இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் மந்திரியின் மகனுக்கு திருமணம் என்றால் அதற்கு எவ்வளவு பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடக்கும். ஆனால், பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் பதவி வகிக்கும் சுஷில்குமார் மோடியின் மூத்த மகன் உத்கர்ஷ் அவர்களின் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
மணமகன் உத்கர்ஷ் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், மணமகள் யாமினி கொல்கத்தாவை சேர்ந்த பட்டய கணக்காளர். பீகாரில் உள்ள கால்நடை மருத்துவகல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் விருந்தினர்களை மகிழ்விக்க இசை நிகழ்ச்சிக்கு பதில் வரதட்சணை ஒழிப்பு பிரசார பாடல்கள் பாடப்பட்டது. 350 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்கள் திருமணத்திற்க்கு அல்லது தங்கள் மகன்/மகள் திருமணத்திற்காக வரதட்சணை கேட்கவும், கொடுக்கவும் மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
விருந்தினர்களுக்கு பெரும் உணவு விருந்துக்கு பதில் உடல் உறுப்பு தானம் செய்யும் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உடல் உறுப்பு தானத்துக்காக பதிவு செய்யும் கவுன்டர்கள் திறக்கபட்டிருந்தது. திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களில் 150 க்கும் மேற்பட்டோர் இறப்புக்கு பின் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு இந்த கவுன்டர்களில் பதிவு செய்து கொண்டனர்.
பெரும் உணவு விருந்து இல்லாவிட்டாலும் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு நான்கு லட்டுகள் அடங்கிய பாக்கெட்டும், சூடான தேநீரும் வழங்கப்பட்டது. லட்டுகள் அடங்கிய பாக்கெட்டில் சாப்பிட்ட பின் பாக்கெட்டை குப்பை தொட்டியில் போட சொல்லும் "ஸ்வச் பாரத்" வாசகங்கள் பிரிண்ட் செய்யபட்டிருந்தது.
ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் : இது போன்ற வரதட்சணை வாங்காத எளிய முறையில் நடக்கும் திருமணங்கள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், இதை போன்ற எளிய முறையில் திருமணங்கள் இனி ஹரியானாவிலும் நடத்த அரசு உதவும் என்று கூறியுள்ளார். பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அமைதியான முறையில் நடந்த இந்த திருமணத்தை வரவேற்றுள்ளார், (திருமணம் என்றாலே பாண்ட் வாத்தியங்களின் சத்தத்தால் காது செவிடாகி விடும் அனால் இந்த திருமணம் அந்த சத்தமில்லாமல் அமைதியாக நடைபெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்)
திருமணம் முடிந்த பிறகு சுஷில்குமார் மோடி திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களிடம் பெரும் ஆடம்பர செலவு வைக்காத, இதை போன்ற வரதட்சணை வாங்காத, எளிமையான திருமணங்களை நடத்த சொல்லி வேண்டுகோள் வைத்தார்.