சிறுவர்களுக்கான கார்ட்டூன் திரைப்படங்கள், சீரியல்கள் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி அமெரிக்க அதிபர்களின் உருவங்களை ஆடியோ அனிமேட்ரானிக்ஸ் முறையில் செய்து அவற்றை மக்கள் பார்வைக்கு ஹால் ஆஃப் பிரெஸிடெண்ட்ஸ் என்ற மேடை அரங்கில் மேஜிக் கிங்டம் என்ற டிஸ்னி வேல்ட் ரிசார்ட்டில் வெளியிடுவது வழக்கம், இரண்டு நாட்கள் முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருவ ரோபோ ஒன்று மேடையில் பேசுவது போன்ற காட்சியை வெளியிட்டுள்ள டிஸ்னி நிறுவனம், அந்த ரோபோவின் உருவம் மற்றும் வடிவமைப்பால் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த ரோபோவை பார்த்துவிட்டு ஒருவர் டிவிட்டரில் "இந்த ரோபோவை செய்ய தொடங்கும்போது முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டனை மனதில் கொண்டு உருவாக்க தொடங்கி பின்னர் முடிக்கும் போது டிரம்ப் போல் உருவாக்கி உள்ளனர்" என்று கூறியிருக்கிறார்.
இன்னொருவர் "ஹால் ஆஃப் பிரெஸிடெண்ட்ஸில் இருப்பதிலேயே ஒல்லியான உருவத்தில் இருப்பவர் டிரம்ப் தான் ஆனால் இதை போல் டிரம்ப் ஒருபோதும் ஒல்லியாக இருந்ததில்லை, இதை பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது" என்றிருக்கிறார்.
தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் அவ்வை சண்முகி போல், ஹாலிவுட்டில் மிசஸ் டவுட்ஃபயர் என்ற படம் வெளிவந்தது, அந்த படத்தின் நாயகன் உருவம் போலவே டிரம்ப்பின் உருவத்தை செய்து விட்டனர் என்று ஒருவர் கூறியுள்ளார். இதே போன்று மேலும் பலரும் பல்வேறு பிரபலங்களை போல் இந்த உருவம் காட்சியளிப்பதாக கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு பல அமெரிக்க அதிபர்களின் உருவங்களை வெற்றிகரமாக செய்து பாராட்டு பெற்ற டிஸ்னி நிறுவனம் டிரம்ப் உருவத்தை செய்வதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இந்த விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம்.