உடல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்களையும் பார்க்கும் போது வேதனை தருவதாக இருக்கும். ஆனால், உடல் ஊனமுற்றவர்கள் பெரும்பாலும் தங்கள் உடல் ஊனத்தை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் வாழ்கையில் முன்னேறி வருகின்றனர். அவர்களை கேலியாக பார்க்கும் இந்த சமூகம் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இவர்கள் வாழ்க்கை இருக்கிறது.
சீனாவை சேர்ந்த யாங் லீக்கு 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் மறக்க முடியாத கருப்பு தினமாக மாறி போனது, அப்போது அவளுக்கு முன்று வயது தான், தன் வயதையொத்த சிறு பிள்ளைகளோடு விளையாடி கொண்டிருந்தபோது, தெரியாமல் அங்கிருந்த ஹை வோல்டேஜ் மின்சார ஒயரை தொட்டதால் அடித்த ஷாக்கில் தூக்கி எறியபட்டாள், உடனடியாக மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டதால் உயிர் பிழைத்து கொண்டாலும் மின்சாரம் பாய்ந்த கரங்கள் இரண்டையும் அறுவை சிகிச்சை செய்து வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரண்டு கரங்களையும் இழந்து நின்ற யாங் லீயை பார்த்து அவரது குடும்பமும் சொந்தங்களும் மனமொடிந்து கண்ணீர் சிந்தினாலும், யாங் லீ சிறிதும் நம்பிக்கை இழக்கவில்லை, அவள் வளர வளர அவள் நம்பிக்கையும் வளர்ந்தது, மிகவும் கஷ்டப்பட்டு பள்ளி படிப்பை முடித்த யாங் லீ கடந்த 2007 ஆம் ஆண்டு சீனாவின் புகழ்பெற்ற அன்ஹுயி விவசாய கல்லூரியில் 514 புள்ளிகளுடன் சேர்ந்துள்ளார், இப்போது கல்லூரி படிப்பையும் முடித்து பட்டம் பெற்று ஒரு கிளெர்க்காக வேலை பார்த்து வருகிறார்.
தன் வாழ்க்கையில் நடந்தவற்றையும் தினசரி வாழ்க்கை முறையையும் யாங் லீ சமூக ஊடகங்களில் நேரடி காணொளி காட்சிகளாக பகிர தொடங்கிய பின்பு யாங் லீயின் வாழ்க்கை வெளி உலகுக்கு தெரிய வந்தது, இப்போது சமூக ஊடகங்கள் மூலமாக இவருக்கு 900,000 பேர் ரசிகர்களாக மாறியுள்ளனர்.
"உடல் ஊனமுற்ற மனிதர்களின் வாழ்க்கை மிகவும் சாதாரணமானதாகவும், சலிப்பூட்டுவதாகவும் இருந்தாலும் எனக்கு சமூக ஊடகங்களில் நேரலை காணொளி காட்சி பகிர்வதன் மூலமாக நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர்" என்கிறார் யாங் லீ. இவரை போன்று ஊனமுற்ற மக்கள் பலரின் உள்ளங்களில் யாங் லீயின் வாழ்க்கை நம்பிக்கை விளக்கேற்றுவதாக உள்ளது.