சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள டெங்சோங் நகரில் வசிக்கும் 81 வயது முதியவர் தனது வீட்டு தோட்டத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதியன்று சிறிய காளான் செடி ஒன்று முளை விட தொடங்கியதை கண்டுள்ளார். அடுத்த மூன்றே நாட்களில் இந்த காளான் செடி நாற்பது செ.மீ அகலமும் 84 செ.மீ உயரமுமுள்ள ராட்சத காளானாக (கிட்டத்தட்ட இரண்டு வயதுள்ள சிறு பிள்ளையின் உயரம்) வளர்ந்து அப்பகுதியில் வாழும் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் ராட்சத உருவத்தினால் ஒரே நாள் இரவில் அப்பகுதி வாழ் மக்களிடம் பிரபலமடைந்துவிட்டது.
இந்த காளானை பார்க்க வரும் பலர் இது உண்ணகூடிய விஷத்தன்மை இல்லாத காளானா? என்று கேட்கின்றனர், இது பற்றி சரியாக தெரியாததால் இந்த காளானை பறித்து யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.
மக்கள் இந்த காளான் செடிக்கு அதன் வடிவத்தை பார்த்து பிரமித்து யானை பாதம் என்று பெயரிட்டுள்ளனர். இப்போது தினமும் ஆயிரகணக்கான மக்கள் இந்த காளான் செடியை காண வருகின்றனர், இந்த காளான் செடியால் இப்போது இந்த இடம் ஒரு சுற்றுலா தளம் போல் ஆகிவிட்டது.
Super-size mushroom spotted in Yunnan Province pic.twitter.com/J7kHTlJlUI— CGTN (@CGTNOfficial) October 25, 2017
இந்த செடியிடம் வேண்டுதல் வைத்தால் உடனே நடப்பதாக யாரோ கிளப்பி விட (ஊருக்கு ஒருத்தன் இதுக்காக இருப்பான் போல) கிராம மக்கள் சிலர் இந்த செடியிடம் வேண்டுதல்கள் எல்லாம் வைக்க தொடங்கியுள்ளனர்.
சீன அறிவியல் ஆராய்ச்சி அகடெமியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இது ட்ரைக்ளோமா வகை காளான் என்றும் வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரகூடிய பூஞ்சை காளான் என்றும் அறிவித்துள்ளார்.