இந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, இன்னும் சிலருக்கு நன்றாக படித்திருந்தும் நல்ல வசதியான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான சிறந்த வேலை கிடைப்பதில்லை. இந்நிலையில் இவ்வுலகில் வாழ்வதற்கு அடிப்படை தேவையான வீடு கூட இல்லாமல் வீதியில் அலைபவர்களும் உண்டு. இரக்கம் சிறிதும் இல்லாத மனித உருவில் இருக்கும் மிருகங்கள் இவர்களை தரித்திரம் பிடித்தவர்கள் என்று சொல்லி ஒதுங்கி போவதும் உண்டு.
இப்படி வீதியிலும், சாலை ஓரங்களிலும் பொழுதை கழிக்கும் வீடிலாத மக்கள் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு புகை, கால மாற்றத்தால் வரும் பனி , குளிர், தகிக்கும் வெயில் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்பட்டு கவனிக்க ஆளில்லாமல் இறந்து போவதும் உண்டு. பள்ளி பருவத்தில் தன் வயது பிள்ளைகளோடு விளையாடி பொழுதை போக்க வேண்டிய ஹெயிலி போர்ட் (கிட்சாப் கவுன்டி, வாஷிங்டன்நகரம்) என்ற ஒன்பது வயது பள்ளி செல்லும் சிறுமி வீடில்லாத மக்களுக்கு நகரும் வீடு (தள்ளி செல்ல கூடிய) மொபைல் வீடுகளை கட்டி தரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இவருடைய சேவை, வீடும் உணவுமின்றி, சாலையில் தவித்து கொண்டிருந்த எட்வர்ட் என்ற மனிதரை கண்டபோது துவங்கி இருக்கிறது. அந்த மனிதர் சாலையில் உணவின்றி பசியோடு தவிப்பதை பார்த்து இச்சிறுமி தன் தாயிடம் அவருக்கு ஏதாவது உணவு தரும்படி கேட்டிருக்கிறார், அவருக்கு ஒரு சான்ட்விச் கொடுத்து அவர் பசியை போக்கி இருக்கிறார், பிறகு இவரை போன்றவர்களுக்கு உதவி செய்வதற்கென்று தன் வீட்டு தோட்டத்தில் காய்கறிகளை பயிர் செய்து, விளையும் காய்கறிகளை உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு வழங்கி உதவி செய்து வருகிறார்.
எட்வர்டுக்கு உணவு கொடுத்து உதவிய பின்பு தான் அவருக்கு வீடும் கிடையாது என்று தெரிய வந்துள்ளது, அவரது கஷ்டத்தை போக்க வீடு ஒன்றை அவருக்கு தயாரித்து கொடுக்க விரும்பி இருக்கிறார். எட்டுக்கு நாலு அளவில் ஜன்னலும் கதவும் கொண்ட சிறிய மர வீடுகளை சக்கரங்களோடு (தள்ளி செல்வதற்கு வசதியாக) தயார் செய்து இலவசமாக வழங்கி இருக்கிறார்.
பின்பு வீடில்லாத மக்களுக்கு எல்லாம் தன் பெற்றோர்கள் உதவியுடன் வீடுகளை தயாரித்து வழங்க துவங்கி இருக்கிறார், இந்த வகை மொபைல் வீடுகளை உருவாக்குவதற்கு முன்னூறு டாலர் வரை செலவாகிறது (நம்ம ஊர் பணத்தில் சுமார் இருபதாயிரம் ரூபாய்) இவர் செய்யும் சேவையை அறிந்து இவருக்கு சலுகை விலையில் பொருட்களை சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
"வீடில்லாமல் மக்கள் வீதியில் திரிவது எனக்கு சரியாக படவில்லை , எல்லா மனிதர்களுக்கும் தங்குவதற்கு சிறிய இடமாவது இருக்க வேண்டும், மோசமான வானிலை மாற்றங்களால் வீடில்லாத ஏழை மக்கள் பாதிக்கபடுவதை காண நான் விரும்பவில்லை" என்று கூறுகிறார் இந்த சிறு வயது கொடை வள்ளல்.