சில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்களை முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்கும்போது, பிள்ளையை தொலைச்சிட்டு பெத்தவங்க மனசு என்ன பாடுபடும், என்று எண்ணி இதயம் கனத்து போகும். அதே சமயம் இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் காணாமல் போனவர்கள், பிரிந்த சொந்தங்களை கண்டுபிடித்து இணையும் அதிசய சம்பவங்களும் நடக்க தான் செய்கிறது.
இந்த முறை காணாமல் போன ஒரு தாய் தன் குடும்பத்தினருடன் திரும்பவும் இணைந்திட யூ டியூப் காணொளி காட்சி பகிரும் ஊடகம் உதவி இருக்கிறது என்பது தான் வியப்பளிக்கும் செய்தி. கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி ப்ரூக் ராபர்ட்ஸ் என்பவர் வீடின்றி சாலையோரங்களில் வாழும் ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்களை விநியோகம் செய்திருக்கிறார். அப்போது தலையில் பனிகுல்லா அணிந்து குட்டை கூந்தலுடன் காணப்படும் ஒரு பெண்மணிக்கு உணவு வழங்கும் காட்சியையும் படம் பிடித்து யூ டியூப் வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
இந்த காணொளி காட்சியை ஃப்ளோரிடவை சேர்ந்த ஈவான் அல்சன் என்ற சிறுவன் யூ டியூப் வலைதளத்தில் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறான், காரணம் அந்த காணொளி காட்சியில் உணவு பெற்று கொண்டிருந்தது, நவம்பர் மாதம் முதல் காணாமல் போயிருந்த அவன் தாய், அவர் கொஞ்சம் புத்தி சுவாதீனமில்லாமல் இருந்தவர், அவர் திடீரென்று வீட்டிலிருந்து காணாமல் போகவும், எங்கெங்கோ தேடி பார்த்து கிடைக்காமல் போகவும், அவர் இறந்து விட்டார் என்று அவர் குடும்பத்தினர் முடிவு செய்து வேதனையோடு வாழ்ந்து வந்திருக்கின்றனர், இப்போது அவர் தன் குடும்பத்தினருடன் இணைந்திருக்கிறார். சமூக வலைத்தளங்கள் மூலம் சில நல்ல விஷயங்களும் நடக்க தான் செய்கிறது.