ஆட்டோ ராஜா - ஒரு டெலிபோன் லைன்மேனின் மகன், சிறு வயதிலேயே குடி, திருட்டு, சூதாட்டம் என்று எல்லா தீய பழக்கங்களையும் கற்று ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர், அவர் சிறு வயதில் ஆடிய ஆட்டத்தை ஒரு கட்டத்துக்கு மேல் (தாயின் தாலியை கூட விட்டு வைக்காமல் வீட்டிலேயே நகையை திருடி அடகு கடையில் அடகு வைத்திருக்கிறார்) பொறுக்க முடியாத அவர் பெற்றோர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கின்றனர். பெங்களுரு நகர வீதிகளில் யாருமற்ற அனாதையாக சுற்றி திரிந்திருக்கிறார். வயிற்று பிழைப்புக்காக ஹோட்டல்களில் தட்டுகளை கழுவும் வேலையும் பார்த்திருக்கிறார், ஆனால் அங்கேயும் கை வைத்ததின் காரணமாக வேலையிலிருந்து விரட்டப்பட்டார். ஒரு திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு பத்து நாள் வேதனை அனுபவித்திருக்கிறார், வேதனை தாங்க முடியாத போது தன்னை இந்த சிறையிலிருந்து வெளியில் கொண்டு வந்தால் திருந்தி ஒரு நல்ல மனிதனாக வாழ்வதாக கடவுளிடம் ஒரு வேண்டுதல் செய்திருக்கிறார். அவர் பெற்றோர் அவரை சிறையில் இருந்து மீட்டனர். அவர்களிடமிருந்து ஆயிரம் ருபாய் மட்டும் பெற்று ஆட்டோ ஓட்டுவதற்கு டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வாடகை ஆட்டோ ஓட்ட துவங்கினார். அவர் வாழ்க்கை மாற துவங்கியது.
ஆட்டோ ஒட்டி செல்லும்போது தெரு ஓரங்களில், பிளாட்பாரத்தில் ஆதரவற்ற வயதான மக்கள் உணவின்றி உடையின்றி தவிப்பதை காண நேர்ந்திருக்கிறது, இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். ஒரு பனிமழை பொழிந்த பீ என் டி காலனி, டாநெரி சாலையில், இரவில் ஒரு முதியவர் சாலையோரத்தில் குளிரில் நடுங்கியபடி தவிப்பதை கண்டிருக்கிறார், ஆனால் அந்த நேரத்தில் கையில் ஏதுமில்லாததால் உதவி செய்ய முடியாமல் கடந்து சென்றிருக்கிறார். அடுத்த நாள் அந்த பகுதியில் சென்று விசாரித்த போது குளிர் தாங்க முடியாமல் அந்த முதியவர் இறந்து போன அவலம் தெரிய வந்திருக்கிறது. அது முதல் தெருவில் ஆதரவற்ற மக்களை எங்கு கண்டாலும் அவர்களை காப்பாற்றி தன வீட்டிற்க்கு அழைத்து வந்து அவர்களை உணவும், உடையும் கொடுத்து பராமரிக்க தொடங்கி இருக்கிறார்.
முதன் முதலாக இவர் காப்பற்றியது பின்னிபேட் பகுதியில் குப்பை கொட்டும் கிடங்கில் எலும்பும் தோலுமாக கிடந்த ஒரு முதியவரை தான், அப்போது இவரிடத்தில் அவரை பராமரிக்க தேவையான பணம் கையில் இல்லை ஆனால் கடவுள் எப்படியும் தனக்கு உதவுவார் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளத்தில் இருந்திருக்கிறது. இவர் நம்பிக்கை பொய்க்கவில்லை, அந்த நேரத்தில் அறிமுகமில்லாத ஒரு மனிதர் இவரை சந்தித்து பண உதவி செய்துள்ளார்.
பின்பு, ஒரு கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் ஒன்றும், கர்னாடக மாநில முன்னாள் முதல்வர் H D குமாரசுவாமி அவர்களும் இவரை ஆதரித்து கட்டிடம் கட்ட நிலமும், நிதி உதவியும் செய்தனர். இன்று, கிட்டத்தட்ட நான்காயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள், ஆதரவற்றோருக்கு அடைக்கலம் கொடுக்கும் இல்லமாக ' நியூ ஆர்க் மிசன்' என்ற பெயரில் இவரது தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஐம்பது வயது கடந்த நிலையில் இன்றும் அதரவற்ற மக்களை ஆதரிக்கும் புனிதராக ஆட்டோ ராஜா உயர்ந்து நிற்கிறார்.