டிசம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், அவரது ரசிகர்களின் 23 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது, அறிவிப்பு வந்தவுடன் அவரது ரசிகர்கள் இனிப்பு கொடுத்து பட்டாசு வெடித்து கொண்டாட துவங்கிவிட்டனர். எந்த ஒரு கட்சியோடும் இணையாமல் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை துவங்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம் என்ற முடிவை ரசிகர்கள் மத்தியில் அறிவித்துள்ள ரஜினிகாந்த் இப்போது அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் அதை விமர்சிக்க எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன என்று ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.
அரசியலுக்கு வருவதென்றால் வெற்றி பெற வேண்டும், வீரமும் விவேகமும் வேண்டும் என்று சொல்லி வந்த ரஜினிகாந்த், இந்த ஆண்டு அவரது இரண்டு திரைப்படங்கள் வெளிவர தயாராகி கொண்டிருக்கும் நிலையில் மிக கவனமாக எந்த கட்சியையும் நேரடியாக தாக்காமல் பொதுவாக இன்றைய அரசியல் குறித்த தன் பார்வையை தெளிவுபடுத்தி இருப்பதன் மூலம் வீரத்தோடு விவேகமாகவும் தன் முதல் அடியை ரஜினிகாந்த் அரசியலில் எடுத்து வைத்துள்ளார். தமிழக அரசியலில் இதுவரை ஆட்சியில் இருந்த இரண்டு திராவிட கட்சிகளின் பெரும் தலைவர்களில் ஒருவர் மறைந்து விட்டார், இன்னொருவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த்த்தின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்திருக்கிறது. அவர் அரசியலில் களமிறங்கும் அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே அந்த அறிவிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் தலைவர்களிடம் இருந்து அறிக்கைகளும், பேட்டிகளும் வர துவங்கிவிட்டது.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் கமல்ஹாசனின் ட்வீட்
சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக— Kamal Haasan (@ikamalhaasan) December 31, 2017
கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தமிழக அரசியலில் நடந்து வரும் சம்பவங்கள் குறித்து தன் வேதனையை தெரிவித்துள்ள ரஜினிகாந்த், சிஸ்டத்தை சரி செய்வதற்கு தயாராகி விட்டார் என்று தெரிகிறது, அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள், ஆட்சிக்கு வரும் கட்சிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்று கவலைபட்டிருக்கும் ரஜினிகாந்த் கெட்டு போயிருக்கும் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டுமென்றால் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்பது ரஜினிகாந்துக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் மக்கள் ஒரு கட்சி வேட்பாளருக்கு ஒட்டு போட வேண்டுமென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் தங்கள் தொகுதிக்கு என்ன நன்மை செய்வார், மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பாரா? தீர்வு காண்பாரா? என்றெல்லாம் சிந்தித்து ஒட்டு போடுவதில்லை மாறாக ஒட்டு போடுவதற்கு எந்த கட்சி வேட்பாளர் எவ்வளவு கொடுப்பார் என்று எதிர்பார்க்கும் கேவலமான சூழ்நிலை உருவாகியுள்ளது அல்லது அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டு விட்டது. மக்களும் ஊழலுக்கு பழக்கப்பட்டு போய் விட்டனர், பணம் கொடுத்தால் தான் வாக்குச்சாவடிக்கு மக்கள் ஒட்டு போட வருவார்கள் என்ற அவல நிலை வந்துவிட்டது, நேர்மையாக அரசியல் செய்ய விரும்பிய ஒரு சில அரசியல் தலைவர்கள் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், தன்னுடைய மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு என்று தெரிவித்துள்ள ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை வந்தாரை வாழ வைக்கும் தமிழக மக்கள் வரவேற்பார்களா? அவர் கொண்டு வர விரும்பும் அரசியல் மாற்றத்தை மக்களும் விரும்புவர்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...